“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று தாம் சார்ந்த சைவசமயக் கொள்கைக்காக அதிகாரத்தை நோக்கிக் குரலெழுப்பியவர் திருநாவுக்கரசர். பொதுவாக இலக்கிய உலகில் மடைமாற்றம் என்பது காலந்தோறும் இயல்பாக ஏற்படக் கூடியது. சூழல், ஆட்சிமுறை, யாப்பிலக்கணத்தில் புதுமை காணும் போக்கு, எளிமை, கூறவந்தப் பொருண்மை எனப் பல்வேறு கூறுகள் இம்மடைமாற்றத்திற்குக் காரணமாக அமைகின்றன. பக்தி இயக்கத் தோற்றமானது அக்கால மக்கட்சமூகத்தின் வாழ்நிலையில் மட்டுமன்றி இலக்கிய வகைமைகளுக்குள்ளும் பல புது மாற்றங்களை ஏற்படுத்தியது எனில் மிகையாகாது. அப் பக்திஇயக்கத்தின் தோற்றத்திற்கும் பரவலுக்கும் இசையினைத் துணையாகக் கொண்டு பல்வேறு அருள்மொழிகளைப் பதிகங்களாகப் பாடியவர்கள் தேவார ஆசிரியர்கள். அவர்களுள் சம்பந்தரும் நாவுக்கரசரும் யாப்பில் பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அம்முயற்சிகள் யாவும் தமிழுக்கு அளிக்கப்பட்ட யாப்புக் கொடைகளாக உள்ளன எனில் மிகையாகாது. திருநாவுக்கரசரைப் பொறுத்தவரையில் அவர் ‘தாண்டக வேந்தர்’ என்றும் ‘தாண்டக சதுரர்’ என்றும் போற்றப்படக் காரணம் அவருடைய திருத்தாண்டகப் பாடல்களே. அப்பாடல்கள் அனைத்தும் ஆறாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
தாண்டகம் என்ற சொல்லாடல் ஒரு குறிப்பிட்ட யாப்பு வடிவத்தைக் குறிப்பதாகவே தமிழ்ச்சூழலில் வழங்கப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட யாப்பு வடிவத்தில் மட்டும் 99 பதிகங்களை நாவுக்கரசர் பாடியுள்ளார். இவருடைய தாண்டகம் என்கின்ற வடிவத்திற்கான வரையறைகளை நோக்குமிடத்து இருவேறான கருத்துநிலைகள் நிலவுகின்றன. ஒன்று அவை எண்சீர்களாலான ஆசிரிய விருத்தங்கள் மற்றொன்று மரபுநிலைப்பட்டு தொல்காப்பியர் கூறும் கொச்சக ஒரு போகின் ஒருவகை. தி.வே.கோபாலையர் தம் தேவார ஆய்வுத்துணையுள் இரண்டு காய்ச்சீர் இரண்டு மாச்சீர் இவை இரட்டித்து வரும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் நெடுந்தாண்டகம் எனப்படும். இது பொதுவிலக்கணம் என்று வரையறுத்துவிடுகிறார். இதற்கு உதாரணமாக,
அரியானை யந்தணர்தஞ் சிந்தை யானை
யருமறையி னகத்தானை யணுவை யார்க்குந்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கடங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே (6:1:6255)
என்கிற பாடலைக் கூறமுடியும். இப்பாடல் காய் காய் மா தேமா என்கிற வாய்பாடு இரட்டித்து வந்த எண்சீர் ஆசிரிய விருத்த அமைப்பினையுடையது. இவ்வாறான வரையறைக்கு உட்படாத பாடல்கள் குறித்து கூறும்போது காய்ச்சீர் சிறுபான்மையாகக் கனிச்சீர் ஆதலும் உண்டு என்றும் காய்ச்சீர் மாச்சீர் ஆதலும் உண்டு என்றும் நெடுந்தாண்டக யாப்பு பிழையாமல் வந்த பதிகங்கள் சிலவே என்றும் கூறுகிறார். இந்த வரையறை முற்றிலும் பொருந்துவது அல்ல. ஏனெனில் இவ்வாறான வரையறைகளுக்கு உட்படாமல் வேறுசில யாப்பமைப்புகளை உடைய பாடல்களும் திருத்தாண்டகத்தில் காணப்படுகின்றன. ஒரு அளவுகோலை வைத்துக் கொண்டு அனைத்துப் பாடல்களையும் அளவிட்டு விடமுடியாது. காட்டாகச் சில போற்றித் திருத்தாண்டகப் பாடல்களைக் குறிப்பிடலாம்.
உடலின் வினைக ளறுப்பாய் போற்றி
யொள்ளெரி வீசும் பிரானே போற்றி
படருஞ் சடையின் மதியாய் போற்றி
பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரிற் றிகழ்கின்ற சோதீ போற்றி
தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கடலி லொளியாய முத்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
(6:56:6819)
என்கிற பாடலை நோக்குமிடத்து இது மேற்கூறிய வாய்பாட்டமைவில் அமையவில்லை. ஆனால் இதில் வேறொரு யாப்புக்கட்டமைப்பு காணப்படுகிறது. இது கட்டளை அடிகள் பெற்ற பாடல். நிரையசையில் தொடங்கிய அரைஅடிகள் யாவும் 11 எழுத்துக்களைப் பெற்றுள்ளன. நேரசையில் தொடங்கிய அரைஅடிகள் 10 எழுத்துக்களைப் பெற்றுள்ளன. நான்கு அடிகளும் எதுகை பெற்றும் அனைத்து அடிகளும் மோனை பெற்றும் அமைந்துள்ளன. முதலிரு சீர்களும் வெண்டளையால் பிணைக்கப்பட்டுள்ளன. இதனைக் ‘கட்டளைக் கலிப்பா’ என்பர். இந்தப் பாவடிவத்திற்கான வரையறை காரிகை வரையிலான இலக்கணப் பனுவல்களில் இடம்பெறவில்லை. காரிகைக்குப் பிந்தைய காலத்தில் இலக்கணச்சூடாமணி, தொன்னூல்விளக்கம், அறுவகைஇலக்கணம், செய்யுளிலக்கணம், யாப்பதிகாரம், கவிஞராக, கவிபாடலாம், யாப்புநூல், எளிதாகப்பாடலாம், தென்னூல், பாவலர்பண்ணை ஆகியன இவ்வடிவத்திற்கான இலக்கணத்தைக் கூறுகின்றன. சோ.ந.கந்தசாமி, ய.மணிகண்டன் ஆகியோர் தத்தமது யாப்பியல் ஆய்வுகளில் இக்கட்டளைக் கலிப்பாவின் வடிவஅமைதி குறித்துப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இலக்கணநூல்களில் குறிப்பிடப்படாத நேரசையில் தொடங்கும் நாற்சீர் கொண்ட அரையடி பத்து எழுத்துக்களையும், நிரையசையில் தொடங்கும் நாற்சீர் கொண்ட அரையடி பதினோர் எழுத்துக்களையும் பெறும் அடியமைப்புகளும் இலக்கியங்களில் காணப்படுகின்றன என்று கூறுகின்ற ய.மணிகண்டன் உதாரணமாகச் சம்பந்தரின் தேவாரப் பாடலொன்றையும் (1:7:9) காட்டுகிறார். இவ்வடிவத்தினைக் ‘கட்டளைவிருத்தம்’ என்று யாப்புநூல் கூறுவது பொருத்தமாக உள்ளது என்றும் இவர் கூறுகிறார். அவ்வாறே இயற்சீர் நான்கினால் அமைந்த அடி நேரில் தொடங்கின் 11 எழுத்தும் நிரையில் தொடங்கின் 12 எழுத்தும் கட்டளையாகப் பெற்ற கட்டளைக் கலிப்பா வடிவத்தில் சம்பந்தர் பாடியுள்ள பாடல்களை எடுத்துக்காட்டி இவ்வமைப்புக்கு இவரே மூலவர் என்று சோ.ந.கந்தசாமி கூறியுள்ளார். மேலும் நேர் 10, நிரை 11 என்கிற அமைப்பிற்குப் பாரதியின் பாடலொன்றை எடுத்துக்காட்டி ‘புதுவகையான கட்டளைக் கலிப்பாவினைப் பயின்றுள்ளார் பாரதியார்’ என்றும் சோ.ந.கந்தசாமி இவ்வடிவத்தினைக் குறித்துப் பேசியுள்ளார். ஆனால் இவ்வமைப்புக்கான மூலவடிவம் திருநாவுக்கரசரின் தாண்டகப்பாடல்களிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாண்டகம் என்பது ஒரு குறிப்பிட்ட யாப்பு வடிவத்தினைக் குறிக்கின்ற சொல்லாடலாகவே கருதப்பட்டு வந்ததாலும் வடமொழித் தாண்டக அமைப்பு குறித்த தமிழ் இலக்கண உலகப் (வீரசோழியம், யாப்பருங்கலம்) புரிதல்களாலும் இத்தகு புதுமைகள் கவனத்திற் கொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது. திருநெய்த்தானப் பதிகத்தில் உள்ள ஒரு பாடல்,
ஆர்த்த வெனக்கன்ப னீயே யென்று
மாதிக் கயிலாய னீயே யென்றும்
கூர்த்த நடமாடி நீயே யென்றும்
கோடி காமேய குழகா வென்றும்
பார்த்தற் கருள்செய்தாய் நீயே யென்றும்
பழையனூர் மேவிய பண்பா வென்றும்
தீர்த்தன் சிவலோக னீயே யென்று
நின்ற நெய்த்தா னாவென் னெஞ்சுளாயே (6:41:6663)
இவ்வமைப்பினை உடையதே. ஸ்ரீகயிலாயப் போற்றித்திருத்தாண்டகப் பாடல்கள் (6:55,56,57), திருக்கருகாவூர் பதிகப்பாடல்கள் (6:15), திருவாரூர்ப் பதிகப் பாடல்கள் (6:25), திருவாக்கூர் பதிகப்பாடல்கள் (6:21) சிலவும் இவ்வமைப்பினைக் கொண்டு அமைந்துள்ளன. சுமார் 17ஆம் நூற்றாண்டளவில் வடிவ வரையரைக்காகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு பாவடிவத்திற்கான மூலம் நாவுக்கரசரின் தாண்டகப் பாடல்களில் அமைந்துள்ளது சிறப்பானது. எனவே தாண்டகம் என்பதனை எண்சீர்களாலான வேறுபட்ட யாப்பு அமைப்பினைக் கொண்ட பாடல்களின் தொகுப்பைக் குறிக்கின்ற ஒரு சொல்லாடலாகவே கொள்ள இடமுள்ளது. நாவுக்கரசரின் இத்தாண்டகப்பாடல்கள் பிற்காலத்தில் தனித்த இலக்கிய வளர்ச்சிக்கும் யாப்பியல் புதுமைக்கும் வித்தாக அமைந்தன என்றால் அது மிகையாகாது.